சர்வதேச போட்டியில் களமிறங்கினார், தமிழக வீரர் நடராஜன்..! கோலி எடுத்த அதிரடி முடிவு..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக நடராஜன் களமிறங்குகிறார்.

கான்பெர்ரா, டிச-2

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் ஆடும் லெவனில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் அறிமுகமாகி உள்ளார். இதேபோல் ஷர்துல் தாகூரும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணியில் மயங்க் அகர்வால், நவ்தீப் சைனி, முகமது ஷமி, சாஹல் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் ஷுப்மன் கில், ஷர்துல் தாக்குர், நடராஜன், குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக நடராஜன் களமிறங்குகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 71 ‘யார்க்கர்’ பந்துகளை வீசி கவனத்தை ஈர்த்த தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன், முதல்முறையாக சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *