பேச்சுவார்த்தை தோல்வி.. போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி, டிச-1

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 6-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரி பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், டிசம்பர் 3-ம்தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அழைப்பை விவசாயிகள் ஏற்கமறுத்தையடுத்து இன்று நடத்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலில் மறுத்த விவசாய குழு தலைவர்கள் பின்னர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக அறிவித்தனர்.

மத்திய அரசு சார்பில் வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் மற்றும் வர்த்தக கைத்தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

விவசாயிகள் குழு தலைவர்கள் – மத்திய அரசு இடையே மாலை 3.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றும், எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் குழு அறிவித்துள்ளது.

இதன்பிறகு பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்ததாவது:

“கூட்டம் நன்றாக அமைந்தது. டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். நாங்கள் சிறு குழுவை அமைக்க வேண்டும் என்றோம். ஆனால், அவர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். அதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை. போராட்டத்தை ரத்து செய்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளை வலியுறுத்தியுள்ளோம். எனினும், இந்த முடிவு விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளிடம்தான் உள்ளது” என்றார்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் பங்கேற்ற பிரதிநிதி சந்தா சிங் இதுபற்றி தெரிவித்ததாவது:

“வேளாண் சட்டங்களுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். அரசிடமிருந்து தோட்டாக்களோ, அமைதித் தீர்வோ எதுவாக இருந்தாலும் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்வோம். மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் திரும்ப வருவோம்” என்றார் அவர்.

அமைச்சருடனான சந்திப்பு குறித்து அனைத்திந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பிரேம் சிங் தெரிவித்ததாவது:

“இன்றையக் கூட்டம் நன்றாக அமைந்தது. சில முன்னேற்றங்கள் இருந்தன. டிசம்பர் 3-ம் தேதி அரசுடன் நடைபெறவுள்ள அடுத்த சந்திப்பின்போது, வேளாண் சட்டங்களிலுள்ள ஒரு பிரிவுகூட விவசாயிகளின் நலனுக்கானது அல்ல என்று அவர்களை சமாதானப்படுத்துவோம். எங்களது போராட்டம் தொடரும்” என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *