தபால் வாக்கால் கள்ள ஓட்டுகள் அதிகரிக்கும்.. தேர்தல் ஆணையத்தில் அலறியடித்து மனு கொடுத்த திமுக..!

விரிவு படுத்தப்பட்ட தபால் வாக்கு முறை திட்டத்தைக் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற திட்டமிடுதலை கைவிட வேண்டும் என திமுக தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி, டிச-1

திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், கட்சியின் பொருளாளருமான எம்பி டி.ஆர்.பாலு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில்,’விரிவு படுத்தப்பட்ட தபால் வாக்கு முறை திட்டத்தைக் ஆணையம் கைவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில்,’ தேர்தலின் போது அத்தியாவசியத்திற்காக தான் ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர் வாக்களிக்களிக்கும் விதமாக தபால் ஓட்டு என்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இந்த விவகாரத்தில் வாக்களிக்கும் மூத்த குடிமகன்களின் வயது நிர்ணயத்தை முதலில் 80, பின்னர் 60க்கு மேல் தற்போது மீண்டும் 80 என பல்வேறு நிலைபாட்டை ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குழப்பத்தை தான் ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்ற தபால் ஓட்டை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரி தான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என்பது தேர்தல் விதியாக உள்ளது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் பல்வேறு முறைகேடுகள் கண்டிப்பாக நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் அந்த முறையை திரும்பப்பெற வேண்டும். அதேப்போன்று 80வயது நிறைந்த மூத்த குடிமகன்களுக்கு என தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை தேர்தலின் போது ஆணையம் அமைத்திட வேண்டும். இதில் முக்கியமாக வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வாக்குரிமை உள்ளதா என்பது குறித்து ஆணையத்தின் தரப்பில் தான் சரிபாக்க வேண்டும். இதுபோன்ற தபால் ஓட்டு முறையால் நூற்றுக்கு 3 கள்ள ஓட்டாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. கடந்தகால தேர்தலில் இத்தகைய பிரச்சனையை பார்த்துள்ளோம்.

இதைத்தவிர 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடியாக தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறைக்குப் பதிலாக அவர்களுக்கும் தபால் வாக்கு அளிக்கும் முறையை தேர்தல் ஆணையம் பிகார் தேர்தலில் போது கொண்டு வந்தது. இந்த நடைமுறைய நாடு முழுவதும் மற்றும் குறிப்பாக 2021ல் தமிழகத்தில் நடக்கவிருக்கும் தேர்தலிலும் அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இது நேர்மையான தேர்தல் நடைமுறையைக் கெடுத்து கள்ள ஓட்டுகள் அதிகரிக்க வாய்ப்பளிக்கும் விதமாக அமைவது மட்டுமில்லாமல், மொத்தத்தில் சுமார் 15 சதவீத வாக்கு முறைகேடாக நடைபெறும். அதனால் இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு சரியான ஒன்று கிடையாது என்பதால், தற்போது உள்ள இந்த விரிவுப் படுத்தப்பட்ட தபால் வாக்கு திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *