தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சி இல்லை.. வருத்தப்பட்ட ராகுல் காந்தி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற கடுமையாக பாடுபடுங்கள் என்று ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, டிச-1

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை காணொலி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை எப்படி தேர்வு செய்வது? மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை மேலும் வலிமைப்படுத்தும் வழிமுறைகள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்து விரிவாக பேசப்பட்டது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் ராகுல் காந்தி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சி இல்லை. என்றாலும், காங்கிரஸ் வலிமையான இயக்கமாக இருப்பது மகிழ்ச்சி. இன்னும் கடுமையாக உழைத்தால் கட்சி மேலும் வலிமை பெறும். காங்கிரசார் அனைவரும் ஒரே லட்சியத்துடன் செயல் பட வேண்டும். கட்சி பற்றி மாவட்ட கருத்துக்களை பேசக் கூடாது. ஒரு குரலாக ஒலிக்க வேண்டும். கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டர்கள், தலைவர்கள் இணைந்து பணிபுரிந்து கட்சியை வளர்க்க வேண்டும்.
மத்திய, மாநில ஆட்சிகளால் தற்போது தமிழக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு விடிவு காலம் ஏற்படும் வகையில் தி.மு.க.- காங்கிரஸ் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் வகையில் தமிழக காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் நமது கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும். அந்த லட்சியத்தை அடையும் வகையில் நமது தேர்தல் பணி, பிரசாரம் அமைய வேண்டும். இந்த வெற்றியை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த காணொலி காட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய பொதுச்செயலாளர்கள் வேணுகோபால், முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.பி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநா வுக்கரசர், கிருஷ்ணசாமி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாணிக்கம் தாகூர், செல்ல குமார், ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள் இதில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *