முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்..!

பாரத் நெட் ஊழலை எதிர்த்து விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, இன்று மக்கள் நீதி மய்யத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இணைந்தார். அவருக்குக் கட்சியின் தலைமை அலுவலகப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

சென்னை, டிச-1

ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய சந்தோஷ் பாபு பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென விருப்ப ஓய்வு பெற்றார். நீண்ட ஆட்சிப் பணி அனுபவமுள்ள ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ஐ.டி. துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றினார்.
சந்தோஷ் பாபு நிர்வாக இயக்குநராக இருந்த தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனுக்கான டெண்டருக்கு ஒப்புதல் அளிக்குமாறு அழுத்தம் கொடுத்ததில் அவர் அதிருப்தி அடைந்ததால், விருப்ப ஓய்வு கொடுத்து வெளியேறியதாகப் பரவலாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் விருப்ப ஓய்வை அரசு அங்கீகரித்து சில மாதங்கள் சென்ற நிலையில், சந்தோஷ் பாபு இன்று திடீரென மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன் அவர் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு உடனடியாகக் கட்சியின் தலைமை அலுவலகப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் கமல்ஹாசனுடன் இணைந்து பேட்டி அளித்தார். தமிழக அரசின் அழுத்தம் காரணமாகத் தான் பதவி விலகியதாக சந்தோஷ் பாபு தெரிவித்தார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரு.சந்தோஷ் பாபு தன்னுடைய அபாரமான நேர்மை, அர்ப்பணிப்பு, செயல்திறன் மற்றும் சமூக அக்கறைக்காக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர். இன்னும் 8 ஆண்டுகள் அரசு பணி இருந்த போதும், மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் உயரிய நோக்கில் தான் வகித்த உயர் பதவியை உதறி, விருப்ப ஓய்வு பெற்றார். வாழ்நாள் முழுக்க சமரசமற்ற நேர்மையோடும் துணிச்சலுடனும், ஊழலுக்கு எதிராக போராடி வந்த திரு.சந்தோஷ் பாபு அவர்கள் தமிழகத்தை சீரமைக்கும் அரும்பணியில் நம்மோடு இணைந்து இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன். மிகச் சரியான முடிவினை எடுத்திருக்கும் திரு.சந்தோஷ் பாபுவை மனதார பாராட்டுகிறேன். சந்தோஷ் குமாரினைப் போன்ற நேர்மையாளரின் வருகை நமது கட்சிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

அவரை பொதுச்செயலாளராக நியமித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தான் செய்த பணிகள் அனைத்திலும் முத்திரைப் பதித்தவர் இதிலும் தடம் பதிப்பாளர் என்பதில் ஐயமில்லை. எப்போதும்போல அனைத்து உறுப்பினர்களும் நமது புதிய பொதுச் செயலாளர் (தலைமை அலுவலகம்) அவர்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பையும் ஆதரவினையும் அளித்திட வேண்டுகிறேன்.

என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *