வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பு தான்.. முடிவாக கூறிய பிரதமர் மோடி..!!

வாரணாசி, நவ-30

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு தேவ் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாரணாசியில் உள்ள ராஜாதலாப் பகுதியில் இருந்து பிரயாக்ராஜின் ஹண்டியா வரையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது;-

‘குரு நானக் ஜெயந்தி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டு வாரணாசி மேம்பட்ட உள்கட்டமைப்பைப் பெற்று வருகிறது. இது வாரணாசி மற்றும் பிரயாகராஜ் இரு பகுதிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் காசி நகரை அழகுபடுத்துவதோடு, அதனுடன் இணைந்த பணிகளின் பலனையும் இப்போது நாம் காணலாம். வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் நடந்துள்ளன.

விவசாயிகளுக்கும், பிற வேளாண் உட்கட்டமைப்புகளுக்கும் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளோம்.ஒரு பகுதியில் போக்குவரத்து வசதி மேம்படும் போது, அங்குள்ள விவசாயிகளுக்கு பலன் தருகிறது.கடந்த காலங்களில் விவசாய கடன் தள்ளுபடிகள் அறிவித்த போதிலும் அதன் பலன்கள் விவசாயிகளுக்கு சேரவில்லை. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்ட பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.

இப்போது ஒரு தவறான பிரச்சாரம் பரவி வருகிறது. வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

விவசாயிகள் தங்கள் நலன்களுக்கு எதிர்கால மற்றும் ஆதாரமற்ற அச்சுறுத்தல்கள் என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

முன்னதாக விவசாய கடன் தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் போதும் அதன் பயன்கள் விவசாயிகளுக்கு சென்றடையவில்லை.

கடன் தள்ளுபடி ஒரு தந்திரம், முன்னதாக விவசாயிகளுக்கு லாபம் மறுக்கப்பட்டது, இடைத்தரகருக்கு லாபம் உறுதி செய்யப்பட்டுவந்தது. விவசாயிகளில் ஒரு பகுதியினர் சந்தேகம் கொண்டிருந்தால், அவர்கள் எப்போதுமே முன்பு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் நாம் இந்த புதிய வேளாண் சட்டங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகளை பார்த்து அனுபவிக்கப்போகிறோம்.

இவ்வாறு மோடி கூறினார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது ‘குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *