சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை.. முதல்வர் பேட்டி

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை, நவ-30

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து துரைப்பாக்கம் ஒக்கியம் மடு, நூக்கம்பாளையம், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, முட்டுக்காடு முகத்துவார பகுதி ஆகிய பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து சோழிங்கநல்லூர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது;-

தாழ்வான இடங்களில் தேங்கும் நீரை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தேன். தாழ்வான இடங்களில் நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் தொடர் நடவடிக்கையால், வெள்ள பாதிக்கும் இடங்கள் தற்போது குறைந்துள்ளது. செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்புநிலப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும். பள்ளிக்கரணை மத்திய பகுதியில் கால்வாய் அமைத்தால் வெள்ளம் தேங்காது.

வெள்ளம் தேங்குவதை தடுக்கும் வகையில் கால்வாய் அமைக்க ரூ.550 கோடி ஒதுக்கப்படும். வடிகால் அமைத்து நேரடியாக பக்கிங்காம் கால்வாயில் மழை நீரை கொண்டு சென்றுவிட திட்டமிடப்பட்டுள்ளது. வேளச்சேரி, ராம்நகர், மடிப்பாக்கத்தில் காலியாக இருந்த இடங்களில் தற்போது குடியிருப்புகள் உள்ளன. தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்நிலைகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்குகிறது. 2004ல் மடிப்பாக்கம், வேளச்சேரி, ராம்நகரில் 20% ஆக இருந்த வீடுகள் தற்போது 80% ஆக மாறி உள்ளன. 2015ல் மட்டுமல்ல அதுக்கு முன்பிருந்தே சென்னையில் தண்ணீர் தேங்கிக்கொண்டுதான் இருந்துள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தீர்க்க நிதி ஆதாரமும் தேவை. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிதி ஆதாரம் இல்லை.
மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *