பாஜக பெண் எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி
ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக எம்.எல்.ஏவுமான கிரண் மகேஸ்வரி(59) கொரோனாவால் உயிரிழந்தார்.
டெல்லி, நவ-30

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண் மகேஸ்வரிக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி இன்று(நவ.30) அவர் உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் அவர், முன்னதாக மாநில சுகாதாரம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், உதய்பூர் தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாநில முன்னேற்றம், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதற்கு எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி பல முயற்சிகளை மேற்கொண்டதாக பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.