கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி
டெல்லி, நவ-28

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது.
இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். முதல் கட்டமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு இன்று காலை நேரில் சென்றார். அந்நிறுவனம் தயாரிக்கும் ‘ZYCOV-D’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்ததோடு தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் பிரதமர் மோடி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் சென்றார். ஹக்கிம்பேட் விமானப்படை நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு சென்றார். இந்த நிறுவனம் தயாரித்து வரும் ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி, 3-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. அதன் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். பாரத் பயோடெக் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டிலும் பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார்.