நிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்

நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ. 100 கோடி நிவாரணம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி, நவ-28

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நிவர் புயலால் புதுச்சேரியில் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லாத அளவுக்குப் பல துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றியதுடன் நிவாரண பணிகளையும் மிக வேகமாக செய்தனர். இதனால் மக்களின் சகஜ வாழ்க்கை திரும்பியுள்ளது.

இந்நிலையில், பேரிடர்த் துறை கூட்டத்தைக் கூட்டி, புயல் பாதிப்பு சம்பந்தமாக முறையாகக் கணக்கெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். நிவர் புயல் பாதிப்பால் சுமார் ரூ.400 கோடி அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசானது இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

ஆங்கிலப் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து முதன்மையான மாநிலங்களுக்கு விருது வழங்குகிறது. இதில் சட்டம்-ஒழுங்கு, விவசாயம், கல்வி, மருத்துவம், சுற்றுப்புறச்சூழல், சுற்றுலா போன்ற துறைகளில் பல விருதுகளைத் தொடர்ந்து நாம் பெற்றுள்ளோம். இந்தாண்டு புதுச்சேரி மாநிலம் மருத்துவம், கல்வி ஆகிய இரு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு என்று அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு மக்களைக் காப்பாற்றி உள்ளது என்று 17 சிறிய மாநிலத்தில் புதுச்சேரிக்கு 2வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறப்பான முறையில் மருத்துவமனைகள் பராமரிக்கின்ற பிரிவில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. கல்வியிலும் புதுச்சேரிக்கு விருது கிடைத்துள்ளது. புதுச்சேரியைச் சுத்தமாக வைத்திருத்தல், சுற்றுப்புறச் சூழல் இவைகளையும் இணைந்து 4 விருதுகளை பெற்றுள்ளோம். இது மக்கள் மற்றும் நிர்வாகத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.

நான்கரை ஆண்டுகள் செயல்படாத எதிர்க்கட்சிகள் எல்லாம் தேர்தல் வருகிறது என்பதால் மாறிமாறி அறிக்கை விடத் தொடங்கியுள்ளன. மத்திய அரசு மாநிலத்துக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்காவிட்டாலும், ஆளுநரின் தொல்லைகளை எல்லாம் சமாளித்து நானும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இரவு, பகலாக உழைத்து மாநிலத்தில் வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளோம்.

ஆனால், கொரோனா வந்தபோது மக்களைத் திரும்பிப் பார்க்காமலும், புயல் வந்தபோது பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்காமலும் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி எங்களுடைய அரசைப் பற்றி தவறான கருத்துகளைக் கூறி வருகிறார். அக்காலத்தில் அவர் எங்கே இருந்தார் என்பதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். நிவர் புயலை எதிர்கொண்டு உயிர்ச் சேதமில்லாமல் மக்களைப் பாதுகாத்த அரசு என்று எங்களைத் தேசிய அளவிலான பத்திரிக்கைள், தொலைக்காட்சிகள் பாராட்டுகின்றன. ஆனால், வீட்டை விட்டு வெளியே வராமல் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அறிக்கை விடுகின்றனர்.

கொரோனா தொற்றால் வருவாய் குறைந்தபோதும் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ஆனால், செயல்படாத எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகள் குறை கூறுவதையே காரணமாக வைத்து எங்களுடைய அரசின் மீது களங்கம் விளைவிக்கும் வேலையைப் பார்க்கின்றனர். அது மக்கள் மத்தியில் எடுபடாது. எதிர்க்கட்சி தலைவர் ஒட்டுமொத்தமாக அரசைக் குறை கூறுவது, அரசியலுக்காக என்பது தெளிவாகிறது.

கடந்த முறை ரங்கசாமி தலைமையில் ஆட்சி இருந்தபோது மக்களை எந்தளவுக்கு வஞ்சித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகள் எதிரிக் கட்சிகளாகச் செயல்படுவது வருத்தத்துக்குரியது. மக்கள் நலத்திட்டங்களை அரசு நிறைவேற்றும்போது அதனை யார் தடுக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

அரசின் செயல்பாடுகள், சாதனைகளைப் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளோம். நான்கரை ஆண்டுகள் தூங்கிவிட்டு இப்போது விழித்துக்கொண்டு அரசைக் குறை கூறுபவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கரோனா மற்றும் நிவர் புயலை சிறப்பான முறையில் கையாண்ட மாநிலம் என்று மத்திய பாஜக அரசின் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் எங்களைப் பாராட்டி இருக்கிறார்கள். எதிர்க்கட்சி ஆட்சியே எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதைப் புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.’’

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *