செய்வாரா முதல்வர்?..! அறிக்கை வழியாகவே போர் நடத்தும் மு.க.ஸ்டாலின்..!!
அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் ரூ.13670. ஆனால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 5.44 லட்சம்; ஈரோடு ஐ.ஆர்.டி கல்லூரியில் 3.85 லட்சம் – ஏன் இந்த அநியாயம்?
இக்கல்லூரிகளின் மாணவர்கள் என்னைச் சந்தித்தனர்; அவர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்,
சென்னை, நவ-28

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
“அரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்பட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும், ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தி, ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் கல்வி பெறுவதில் பேரின்னலை ஏற்படுத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசுக் கல்லூரி அடிப்படையில் கவுன்சிலிங், கட்டண வசூல் தனியார் கல்லூரி மாதிரி; என்பது கொடுமையாக இருக்கிறது. ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் 5.44 லட்சம் ரூபாய் கட்டணம் என்று கடந்த 12.11.2020 அன்று அரசு திடீரென்று அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே இந்தக் கட்டணத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட, அதன்படி இந்த ஆண்டுக்கான மருத்துவச் சேர்க்கைக் குறிப்பேட்டில் கல்விக்கட்டணம் ரூ. 4 லட்சம் என்று தெரிவித்து விட்டு, இப்போது அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் 5.44 லட்சம் ரூபாய் என்று மீண்டும் கட்டணத்தைக் கருணையற்ற முறையில் உயர்த்தியுள்ளது அதிமுக அரசு.
மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இடஒதுக்கீட்டால் பயனடைந்த மாணவர்களின் கல்விக் கனவை அதிகக் கட்டணம் என்ற பெயரில் பறிப்பதாகவே அதிமுக அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
ஈரோடு ஐ.ஆர்.டி. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணம் 3.85 லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளும் அரசு நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளா அல்லது அரசு கல்லூரிகளா என்ற சந்தேகமும் கவலையும் எல்லா மாணவர்களுக்கும் எழுகிறது.
ஏனென்றால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் 13 ஆயிரத்து 670 ரூபாய். பல் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் 11 ஆயிரத்து 610 ரூபாய். இந்தக் கட்டணங்களை ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியிலும், ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரியிலும் வசூலிப்பதுதான் நியாயம். அதுதான் பொறுப்புள்ள ஓர் அரசின் கடமையாக இருக்க முடியும்.
ஆனால், அவை இரண்டு கல்லூரிகளையும் அரசுக் கல்லூரிகள் என்று அறிவித்து விட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கல்விக்கட்டணம் வசூல் செய்வது ஏன்? இந்தத் துயரம் உடனடியாக அகற்றப்பட வேண்டும்!
இதுமட்டுமின்றி, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு 2 லட்சம் என்று நிர்ணயித்திருப்பது, பல மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த வருமான வரம்பை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தினால்தான் சமூக நீதியும், ஏழை எளிய நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவும் நிறைவேற்றப்படும்.
மருத்துவக் கல்லூரிகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த 30.11.2020 என்ற இறுதிக் கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பெற்றோர் மேற்கண்ட இரு கல்லூரிகளிலும் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இந்த அதிகக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தாலும் அதிமுக அரசு மயான அமைதி காக்கிறது. இது மாணவர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு ஐ.ஆர்.டி. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கல்விக் கட்டணத்தை ரூ.13 ஆயிரத்து 670 (மருத்துவக் கல்வி) என்றும், ரூ.11 ஆயிரத்து 610 (பல் மருத்துவக் கல்வி) என்றும் உடனடியாகக் குறைத்து அறிவித்து ஆணை வெளியிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெறும் வருமான வரம்பினை ரூ. 2 லட்சத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இது கட்டணம் செலுத்த முடியாத ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கண்ணீர்க் கோரிக்கை!
‘அரசுப் பள்ளியில் படித்ததால் அவர்கள் கஷ்டம் எனக்குத் தெரியும்’ என்று பத்திரிகையாளர்களிடம் கோபப்பட்ட முதல்வர் பழனிசாமி, இந்தக் கல்விக் கட்டணத்தைக் குறைத்து, அரசுக் கல்லூரி மருத்துவ மாணவர்களின் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். செய்வாரா முதல்வர்?”.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.