கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

சீரம் இன்ஸ்டிடியூட் உள்பட 3 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்.

டெல்லி, நவ-27

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பலநாடுகள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமத்தை மகாராஷ்டிர மாநிலம் புனேவை தலைமையாக கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வருகிறது.

பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரான இந்த தடுப்பூசிக்கான ஆராய்ச்சி பணிகள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் ஸைடஸ் பயோடெக் நிறுவனமும் கொரோனா தடுப்பூசி ஆராய்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக், ஸைடஸ் பயோடெக் ஆகிய மூன்று நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்.

இதற்காக பிரதமர் மோடி நாளை புனே, அகமதாபாத், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு பயணத்தின்போது மருத்துவ விஞ்ஞானிகளிடம் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் தற்போதைய நிலை, தடுப்பூசி தயாரிப்பில் உள்ள சவால்கள், நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க எடுத்துக்கொள்ளும் காலம், மக்களுக்கு தடுப்பூசியை கொண்டு சேர்ப்பதில் உள்ள சவால்கள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை செய்யவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *