உண்மைக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு நன்றி -எடப்பாடி பழனிசாமி
சென்னை, அக்டோபர்-24
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியிலும் கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகியுள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி முகம் காணப்படும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி வருகை தந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளிடம் முதல்வர் பழனிசாமி பேசும்போது, கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டதால் தான் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதுவே இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறினார். மேலும், இவ்விரண்டு தொகுதிகளிலும் மக்கள் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி.

வருங்காலத்திலும் அதிமுகவுக்கு, மற்ற கட்சிகளுடனான கூட்டணி தொடரும். இடைத்தேர்தலில் உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்களவைத் தேர்தலின் போதும் மக்களுக்கு உண்மையைத்தான் சொன்னோம். அப்போது நம்பவில்லை. தற்போது உண்மையை அறிந்து மக்கள் வாக்களித்துள்ளனர். தர்மம், நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பதை இடைத் தேர்தல் வெற்றி நிரூபித்துள்ளது. பொய்யை நம்பியதால் திமுக 2 தொகுதிகளையும் இழந்துவிட்டது. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் என்று கூறினார்.

அதேப்போல செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அப்போது, முரசொலி அலுவலக கட்டடம் உள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.