புயல் சேதங்களை கணக்கிடும் பணி விரைவில் முடிக்கப்படும்.. அமைச்சர் S.P.வேலுமணி தகவல்

புயல் சேதங்களை கணக்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை, நவ-27

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கண்ணன் காலனியில் ஜெட் ராடிங் இயந்திரங்கள் மற்றும் 25 எச்பி பம்பு செட்டுகள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பிறகு அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதித்த பகுதிகள் முழு பாதுகாப்பாக இருந்தன. சென்னையில் முக்கியமான சாலைகளில் விழுந்த மரங்கள் இரவோடு இரவாகவே அகற்றப்பட்டுவிட்டன. இதனால் போக்குவரத்து பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. முன்கூட்டியே அரசின் எச்சரிக்கையை மக்களிடம் கொண்டு சேர்த்ததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக ஒருசில உயிரிழப்புகள் மட்டுமே நடந்துள்ளன.

சென்னையில் 39 ஆயிரம் தெருக்களில் சுமார் 500 தெருக்கள்தான் மழைநீர் தேங்கக்கூடிய தெருக்களாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது 58 தெருக்களில்தான் மழைநீர் தேங்கியுள்ளது. அவையும் 2அல்லது 3 தினங்களில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புயல் பாதித்த பகுதிகளில் உள்ளாட்சி துறையின் சார்பில் 36 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை புறநகரில் உள்ள சதுப்பு நிலங்களை தூர்வாரி சீரமைக்கும் பணிக்கு அரசிடம் திட்டம் உள்ளது. புயல் சேதங்களை கணக்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் இந்தப் பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *