நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை..! முதல்வர் பெருமிதம்

கடலூர், நவ-26

கடலூரில் பாதிக்கபட்ட பகுதிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார். கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைபள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். நிவர் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். அதனை தொடர்ந்து புயல் பாதுகாப்பு மையத்தில் மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். புயலால் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நிவர் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காவல்துறை உள்ளிட்ட மீட்புப் படைகளை தொடர்பு கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, இன்றைக்கு நிவர் புயல் தமிழகத்துக்கு வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படும் 13 லட்சம் பேர் வரை தங்க வைக்கக் கூடிய அளவுக்கு பாதுகாப்பு முகாம்களை உருவாக்கியிருந்தோம். தற்போது தமிழகம் முழுவதும் 2,999 முகாம்களில் 2.30 லட்சம் பேர் தங்கியிருக்கிறார்கள்.

கடலூரில் மட்டும் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுகிதளில் வசிக்கும் மக்கள் அந்த முகாமில் தங்க வைத்துள்ளோம். இங்கு 52 ஆயிரம் பேர் தங்கியிருந்தனர்.

கடலூரில் 77 மின் கம்பங்கள் புயலால் பாதிக்கப்பட்டன. இன்று சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் காற்றினால் கடலூரில் 321 மரங்கள் சாய்ந்தன. அனைத்து மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

1,670 ஹெக்டேர் நெற்பயிர்கள், 315 ஹெக்டேர் மணிலா பயிர்களும் சேதமடைந்துள்ளன. கடலூரில் ஏற்பட்ட சேதங்கள் முழுமையாகக் கணக்கெடுக்கப்பட வேண்டும்.

புயல் பாதிப்பைத் தடுக்க அரசு அறிவுறுத்தலின்படி செயல்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் எனது நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே இன்று பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

முழுமையான சேதம் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்த பிறகே, நிவாரணப் பணிகள் தொடங்கும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காப்பீடு வழங்கப்படும். உயிரிழப்பைத் தடுக்க, மழைநீர் முழுவதும் அகற்றப்பட்ட பிறகே மின் விநியோகம் தொடங்கப்படும்

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *