புயலை தமிழகம் எதிர்கொண்ட விதம் சிறப்பாக இல்லை.. கமல் புகார்
சென்னை, நவ-26

நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-

இங்குள்ள மக்களின் கஷ்டங்களை, பார்த்தாலே கண்கூடாகத் தெரிகிறது. இங்குள்ளவர்கள் கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகளாக இங்கேயே வசிப்பவர்கள். பேரன் பேத்தியெல்லாம் எடுத்தவர்கள். இவர்களுக்குத் தொடர்ச்சியாக, நன்மை செய்கிறோம், வேறு இடம் கொடுக்கிறோம், வீடு பார்க்கிறோம் என்று பல அரசுகள் சொன்னதை நம்பி ஏமாந்து ஏமாந்து இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது எங்களுக்குப் புதுசு கிடையாது. நாங்கள் 40 ஆண்டுகளாக நற்பணி செய்து வருகிறோம். நாங்கள் அரசு கிடையாது. எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். மழைக்காலத்தில் அவ்வப்போது சாம்பார் சாதம் கொடுப்பதும், பழைய துணி கொடுப்பதும் தீர்வாகாது என்று சொல்கிறோம்.
எங்களால் முடிந்ததை, இவர்கள் கோரிக்கையை அரசாங்கத்திடம் கொண்டு சென்று கேட்போம். இவர்களுக்கு பதில் சொல்லவேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, எங்களின் கடமையும்கூட. அதனால் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க நாங்கள் முயற்சி செய்வோம்.
இன்னும் கஜா புயல் நிவாரணமே முழுமையாகச் சென்று சேரவில்லை. நாங்கள் கேட்போம். இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுப்போம். கஜா புயல் நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாகக் கொடுக்கவில்லை. ஆனால், தற்போது நிவாரணத் தொகையைத் தருவதாகச் சொல்கிறார்கள்? இது மக்கள் மீதுள்ள அக்கறையா? அல்லது தேர்தலுக்காகவா?
கண்டிப்பாக தேர்தல் அவசரம்தான். அதிலாவது மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.
புயலை எதிர்கொள்ளத் தமிழகம் தயாராகவில்லை என்று சொல்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்பது ஊரறிந்த உண்மை. சென்னையைப் பொறுத்தவரை முன்பிருந்ததை விடச் சிறப்பாக இருந்தது. ஆனால், பாராட்டுக்குரியதாக இருந்ததா என்றால் இல்லை. ஏனென்றால் இவர்கள் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது பாராட்ட ஒன்றுமில்லை.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.