கடலூரில் ஏற்பட்ட நிவர் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்
கடலூரில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர், நவ-26

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
“வங்கக் கடலில் உருவான நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 23.11.2020 அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி பொதுமக்களும் மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் பணிகளை ஆய்வு செய்து, செய்தியாளர்களிடம் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், பொதுமக்கள் நிவர் புயல் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, 25.11.2020 அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டதையொட்டி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு முதல்வர் நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்து பொதுமக்கள் யாரும் பாதிப்படையாவண்ணம் கரையோரப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தேவையான உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இன்று முதல்வர், கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி-கீழ்க்குமாரமங்கலம் கிராமப் பகுதிகளில் புயலால் சேதமடைந்துள்ள வாழைத் தோப்புகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். தேவனாம்பட்டினம், அரசு முகாமில் புயல் மற்றும் மழைநீரினால் பாதிக்கப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, குறைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்ட மீனவ மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, அவர்களுடைய படகுகளையெல்லாம் கடலூர், முதுநகர் துறைமுகப் பகுதியில் பத்திரப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைப் பார்வையிட்டார். மேலும், அப்பகுதி மீனவ கிராம மக்களைச் சந்தித்து அவர்களிடம் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்றுக் கொண்டதுடன் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் பணியினரிடமும் மீட்புப் பணி நடவடிக்கைகளைக் கேட்டறிந்தார்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.