புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்த நிவர் புயல்..!

புதுச்சேரி, நவ-26

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் புதன்கிழமை இரவு 10.58 மணிக்கு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கத் தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்தது. பல இடங்களில் தகவல் தொடர்பும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் தென்னை உள்ளிட்ட மரங்கள் சூறாவளி காற்றால் அடியோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன.
மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை, வானூர், மயிலம், செஞ்சி உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

கடலூர் மாவட்டம் மனம்பாடி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

புதுச்சேரியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வேரோடு சாய்ந்த பழமையான மரங்கள் விழுந்ததால் மின்சார கம்பிகளும் அறுந்து விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாலை கரையைக் கடந்த புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கி.மீ. வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டுள்ளது. “நிவர்’ புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக வடசென்னையில் 160 மி.மீ. மழை பதிவானது.

நிவர் புயல் கரையைக் கடந்தாலும், கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளான கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவுகளாக காட்சியளித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *