ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்ளே தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரெக் பார்க்ளே தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

துபாய், நவ-26

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது தனிப்பட்ட தலைவராக இருந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரனின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். அதனையடுத்து துணைத் தலைவர் இம்ரான் கவாஜா தலைவர் பொறுப்பை கவனித்தார்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலில் நியூசிலாந்தை சேர்ந்த கிரெக் பார்க்ளே, இம்ரான் கவாஜா ஆகியோர் போட்டியிட்டனர். கவுன்சிலில் 104 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால் இந்த தேர்தலில் இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 16 நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றவை.

இந்நிலையில் நேற்று ஐசிசி காலாண்டு கூட்டத்தில், 2ம் கட்ட தேர்தல் நடந்தது. அதில் கிரெக் 11 வாக்குகளும், இம்ரான் 5 வாக்குகளும் பெற்றனர். இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கிரெக்கையும், பாகிஸ்தான் உட்பட 5 நாடுகள் இம்ரானையும் ஆதரித்ததாக கூறப்படுகிறது.

புதிய தலைவராக தேர்வாகி உள்ள கிரெக்கின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். பிரபல வழக்கறிஞரான இவர் ஐசிசியில் ஏற்கனவே நியூசிலாந்து பிரதிநிதியாக உள்ளார். மேலும் நியூசிலாந்து கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

தேர்வுக்கு பிறகு பேசிய கிரெக், ‘என்னை தலைவராக தேர்ந்தெடுக்க காரணமான அனைவருக்கும் நன்றி. உலகளாவிய தொற்று நோயில் இருந்து வலுவான நிலையில் வெளிப்படுவோம். அனைவரின் ஒத்துழைப்புடன் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். உலகின் அதிகமானவர்களை கிரிக்கெட்டை ரசிக்க வைப்போம். ஐசிசியில் உறுப்பினர்களாக உள்ள 104 நாடுகளின் சார்பாக செயல்படுவேன். இந்த கடினமான காலகட்டத்தில் ஐசிசி தலைவராக செயல்பட்ட இம்ரான் கவாஜாவுக்கு நன்றி. வருங்காலத்தில் அவருடன் இணைந்து செயல்படுவேன்’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *