பீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு
பீகாரில் எதிர்க்கட்சியின் கடும் அமளிக்கு மத்தியில் நடந்த வாக்கெடுப்பில், பாஜகவைச் சேர்ந்த விஜய் சின்கா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாட்னா, நவ-25

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து 4-வது முறையாக முதல்வராக நிதிஷ் குமார் கடந்த 16-ம் தேதி பதவியேற்று கொண்டார். அவருடன் 14 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.
இந்நிலையில், பீகார் சட்டமன்ற சபாநாயகர் தேர்வு இன்று நடைபெற்றது. இதில், சபாநாயகர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக இருந்த சின்ஹாவுக்கு 126 வாக்குகள் கிடைத்தன. மகா கூட்டணி வேட்பாளர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு 114 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றதால் பீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து, முதலமைச்சர், நிதிஷ் குமார் துணை முதல்வர்கள் – தார் கிஷோர் பிரசாத் , ரேணு தேவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தேஜாஷ்வி யாதவ் ஆகியோர் சின்ஹாவை சபாநாயகர் நாற்காலிக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். தொடர்ந்து, சபாநாயகராக தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ விஜய் சின்காவிற்கு முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜகவை சேர்ந்த ஒருவர் பீகார் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது, குறிப்பிடத்தக்கது.