விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தும் மாநகராட்சியின் உத்தரவை அனைவரும் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.. S.P.வேலுமணி
நிவர் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், தனியார் நிறுவனங்கள் தாங்கள் வைத்துள்ள பெரிய பதாகைகள் உட்பட அனைத்து விதமான விளம்பர பதாகைகளையும் உடனடியாக அகற்ற வலியுறுத்தும் பெருநகர சென்னை மாநகராட்சியின் உத்தரவை அனைவரும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை, நவ-25

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி நிவர் புயல் இன்று இரவு வலுவான புயலாக கரையை கடக்கும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான நிவாரண முகாம்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. முதலமைச்சர் அவர்கள் நிவர் புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் போது, பலத்த காற்றுடன் கூடிய மழை பொழியக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வியாபார, வணிக நிறுவனங்கள், தங்கள் இடங்களில் அமைந்துள்ள வியாபார பலகைகள் பதாகைகள் மற்றும் தட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்றி சேதாரங்களிலிருந்து தங்களையும் பொது மக்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். தேவையின்றி வெளியில் வர வேண்டாம். தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பொதுமக்கள் மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். நிவாரண மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனவும், இதுதொடர்பாக தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளவும், மழைநீர் தேக்கம் மற்றும் இதர இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள்044-25384530 , 044-25384540 மற்றும் தொலைபேசி எண் 1913 லும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நிவர் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், தனியார் நிறுவனங்கள் தாங்கள் வைத்துள்ள பெரிய பதாகைகள் உட்பட அனைத்து விதமான விளம்பர பதாகைகளையும் உடனடியாக அகற்ற வலியுறுத்தும் பெருநகர சென்னை மாநகராட்சியின் உத்தரவை அனைவரும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நிவர் புயலால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் மேலாண்மை மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். கரையை கடக்கும் வரை #NivarCyclone -ன் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். புயல் பாதிப்புகளை சீர் செய்யும் அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் தங்களின் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.