செம்பரம்பாக்கம் ஏரி மதியம் 12 மணிக்கு திறப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
சென்னை, நவ-25

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. இதன் நீர்மட்ட உயரம் 24 அடி ஆகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. தற்போது தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் சரியாக 12 மணியளவில் வெளியேற்று வழிகள் மூலமாக உபரி நீர் 1,000 கன அடி திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக குன்றத்தூர், நத்தம், காவலூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம், வழுதியம்பேடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோன்று அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்தகவலை செம்பரம்பாக்கம் ஏரியின் வெள்ளக் கட்டுப்பாட்டு அலுவலரும், பொதுப்பணித்துறை உதவி பொறியாளருமான எஸ். பாபு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முதற்கட்டமாக ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுவதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.