மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் பா.ஜ.க. ஆட்சி.. மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு..!!

மகாராஷ்டிராவில் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே கூறியுள்ளார்.

மும்பை, நவ-24

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவசேனா, முதல்வர் பதவிக்கான பிரச்சனை காரணமாக கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்டது.

இந்நிலையில் அவுரங்காபாத்தில் கட்சி நிர்வாகிகளிடையே சட்ட மேலவை தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேசுகையில், ‘‘மகாராஷ்டிராவில் நமது (பா.ஜ.க.) அரசை அமைக்க முடியாது என்ற முடிவுக்கு கட்சித் தொண்டர்கள் வந்துவிட வேண்டாம். அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் இந்த மாநிலத்தில் நாம் ஆட்சியமைப்போம். அதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தற்போது இந்த சட்ட மேலவைக்கான தேர்தல் முடிவதற்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.

மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா தலைமையிலான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில பேரவை உறுப்பினர்கள் பாஜக அதிக பட்சமாக 105 இடங்களை கைவசம் வைத்துள்ளது. அடுத்த இடத்தில் சிவசேனா 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் வைத்துள்ளன.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராவ் சாகேப் தன்வே, அடுத்த 2 அல்லது 3 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பேசியிருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *