புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..!
பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பேரூராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் நிவர் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டுமென, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, நவ-24

நிவர் புயலை எதிர்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று (நவ. 23) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
“வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையைக் கடக்கக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயலுக்கு நிவர் புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்பொழுது வட கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்செரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நிவர் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் தங்களது மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புயலால் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளுக்குத் தேவைப்படின் பிற பகுதிகளைச் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை உடனடியாக அனுப்பி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பருவமழையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு தயார்நிலையில் இருக்க வேண்டும்.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சுரங்கப்பாதைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மழைநீரை வெளியேற்ற பம்புசெட்டுகள் தயார்நிலையில் இருக்க வேண்டும். மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும், சேதமடைந்த சாலைகள், பாலங்கள், தெருவிளக்குகள் மற்றும் அரசு கட்டிடங்கள் உடனுக்குடன் சீரமைக்கப்பட வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிக்க ஏதுவாகப் பராமரிக்கப்பட வேண்டும். ஆற்றங்கரை ஓரங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் தங்குதடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
அதிக மழை வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், காய்ச்சல் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதலை உறுதி செய்ய வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 70 பாப்காட், 21 ஜேசிபி, 112 தானியங்கி கனரக வாகனங்கள், 14 இலகுரக வாகனங்கள், நீரிலும் நிலத்திலும் இயங்கும் தூர்வாரும் 2 ஆம்பிபியன் வாகனங்கள், 4 ரோபோடிக் எக்ஸவேட்டர்கள், 14 ஹைட்ராலிக் எக்ஸவேட்டர்கள், 371 விழுந்த மரங்களை அறுக்கும் கருவிகள், 2 மரம் அறுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள், 6 தானியங்கி மரம் அறுக்கும் இயந்திரங்கள், 18 நடமாடும் உயர்கோபுர மின்விளக்கு, 12 ஹைட்ராலிக்/ஏணி வாகனங்கள், 100 எண்ணிக்கையிலான 2.5 கி.வா. டீசல் ஜெனரேட்டர்கள், 30 எண்ணிக்கையிலான 3 கி.வா. டீசல் ஜெனரேட்டர்கள், 60 ஹெச்.பி. திறன் கொண்ட 2 நீர் இறைக்கும் இயந்திரங்கள், 50 ஹெச்.பி. திறன் கொண்ட 5 நீர் இறைக்கும் இயந்திரங்கள், 25 ஹெச்.பி. திறன் கொண்ட 40 நீர் இறைக்கும் இயந்திரங்கள், 5 ஹெச்.பி. திறன் கொண்ட 70 நீர் இறைக்கும் இயந்திரங்கள், 17 எண்ணிக்கையிலான டெலஸ்கோப்பிக் மரம் அறுக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 x 7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் காவல்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் மற்றும் பிற துறைகளின் அலுவலர்களுடன் இயங்கி வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையின் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களும், 1913 புகார் மையத்தின் எண்ணும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகள், 176 நிவாரண மையங்கள், 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
நான்கு பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்குச் சமையல் செய்யும் அளவுக்குத் தேவையான பொருட்கள், மக்களுக்கு உணவு வழங்க அனைத்து அம்மா உணவகங்களும் உணவு தயாரிக்கத் தயார் நிலையில் உள்ளன.
நிவர் புயல் காரணமாக தற்சமயம் மண்டலத்திற்கு 5 நிவாரண மையங்கள் என 15 மண்டலங்களுக்கும் சேர்த்து 77 நிவாரண மையங்கள் மற்றும் 2 பொது சமையலறைகளில் பொதுமக்களைத் தங்கவைக்கவும், உணவு வழங்கவும் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு மையத்திற்கும் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையைச் சார்ந்த அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேர சிறப்பு குறைதீர்க்கும் தொலைபேசி 044-4567 4567 எண்ணில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களின் குறைகளை உடனடியாக இதில் தெரிவித்துப் பயன்பெறலாம். மேலும், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ஜெட்ராடிங், சூப்பர் சக்கர், தூர் வாரும் இயந்திரங்கள் என மொத்தம் 446 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் 847 ஊராட்சிகள் மழை வெள்ளத்தால் பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் இயற்கை இடர்ப்பாட்டின்போது பொதுமக்களைத் தங்க வைக்க 16 ஆயிரத்து 331 கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களைத் தங்க வைக்க 725 நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் சாலைகளில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகின்றன. அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வாரியத் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் இயங்கி வருகிறது. குடிநீர் சுத்திகரிப்பதற்குத் தேவையான வேதிப்பொருட்கள் கூடுதலாகக் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். தலைமை நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம், தரைமட்ட மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் உள்ள குடிநீர் வரையறுக்கப்பட்ட கால இடைவெளிகளில் கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும். மின் தடைகளைச் சமாளிக்க குடிநீர் வாரியத்தின் சார்பில் 365 ஜெனரேட்டர்களும், 1,189 தனி மின் இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுச் செயலாக்கத்தில் உள்ளன.
பேரூராட்சிகள் நிர்வாகத்தின் சார்பில் 528 பேரூராட்சிகளில் 498 சமுதாயக் கூடங்கள், 662 கல்யாண மண்டபங்கள், 1,439 கல்விக் கூடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரினை வெளியேற்றுவதற்கு 698 மின் மோட்டார்கள், 484 ஜெனரேட்டர்கள், 724 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் அனைத்துப் பேரூராட்சிகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைத்திட வேண்டும்”.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.