சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!
நிவர் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவ-24

”வங்கக் கடலில் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சாலைகளில் தண்ணீர் தேங்கக்கூடும். மின் தடை ஏற்படலாம். மரங்கள் முறிந்து விழலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நள்ளிரவு முதல் காலை வரை பெய்த மழையைப் பொறுத்தவரை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாம்பரம், தரமணி ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புழல் பகுதியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் பகுதியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நள்ளிரவு 2.30 மணி நிலவரப்படி புதுவையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையிலிருந்து 440 கி.மீ. தொலைவிலும். சென்னையிலிருந்து 470 கி.மீ. தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நிவிர் புயலாக மாறி, இன்று மாலை தீவிரப் புயலாக வலுப்பெறும்.
மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே நிவர் தீவிரப் புயல் கரையைக் கடக்கும். அப்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
இன்று தென்மேற்கு வங்கக் கடல், தமிழகம், புதுச்சேரி கடற்பகுதிகளில் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். நாளை பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். புயல் கரையைக் கடக்கும்போது வட தமிழகக் கடலோரப் பகுதியைப் பொறுத்தவரை 4 முதல் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பும். தென் தமிழகக் கடலோரப் பகுதியைப் பொறுத்தவரை 1.5 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பும்.
கடலோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருகியுள்ளது. சென்னையில் சென்டரல் உள்பட தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
புயல் சின்னம் நெருங்கிய வரும் நிலையில் புதுச்சேரியில் காலை 6 மணி முதல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை அருகே 470 கிலோ மீட்டரில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரி அருகே 440 கிலோ மீட்டரில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்கி வருகிறது. புயல் சின்னம் கரையை நோக்கி மணிக்கு 14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு:-
நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படுவோர்களுக்கு உதவ அவசரகால உதவி எண்ணை மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் 1070 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். அத்தியாவசிய அவசிய உதவிகளுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.