அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அமித்ஷா நேரில் பாராட்டு..!
சென்னை, நவ-23

மத்திய ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன், உணவு பதனிடுதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சில தினங்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், தமிழ்நாட்டில் 2011-2020 ஆண்டு வரை உள்ளாட்சி துறையின் சார்பில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் 17.08 இலட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன என்பதையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில், மத்திய அரசின் அனுமதி பெற்று, மாநிலம் முழுவதும், விடுபட்ட தகுதியுள்ள 9.11 இலட்சம் பயனாளிகளின் பெயர் மற்றும் விவரங்கள் ஆவாஸ் பிளஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்கான இரண்டாம் கட்ட இலக்கினை அடைய ஆவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்து பயனாளிகளை தேர்வு செய்ய விரைந்து ஒப்புதல் வழங்க கோரி மத்திய ஊரக வளர்ச்சித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டார்.
மேலும், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தை வருகிற 2022ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சீரிய தலைமையில் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நடத்திய காணொலி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்தார். இந்நிலையில் தமிழக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது, விமான நிலையத்தில் முதல்வர் , துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களோடு உள்லாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் அமித்ஷாவையும் வரவேற்றார். அப்போது வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தமிழக ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படுத்துவதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை 2022 ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததற்காகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்தார்.