மாணவர்களுக்கு இதை செய்தே ஆக வேண்டும்.. முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட பலருக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. கட்டண பிரச்சனையால் தங்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை சிலர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்க மறுத்த மாணவ, மாணவிகளுக்கு உதவ மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, நவ-23

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 7.5% இடஒதுக்கீட்டில், கல்விக்கட்டணம் காரணமாக, தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேராத அரசுப்பள்ளி மாணவ – மாணவியர், மருத்துவ கல்வி பெற, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடித விவரம்:-

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.
7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் அடிப்படையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அனுமதிக்கான இடம்பெற்ற மாணவ மாணவியர் பலருக்கு, கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது என்பதால், தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள நெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.சுபத்ரா, திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த மாணவர் அருண்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர் எஸ்.தங்கபாண்டி, மற்றொரு மாணவி தங்கப்பேச்சி உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பலர், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத பொருளாதார நிலைமைக்கு உள்ளாகியிருக்கும் காரணத்தால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்து, அரசு மருத்துவக் கல்லூரியின் இடஒதுக்கீட்டிற்காகக் காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாக, இன்றைய “தி இந்து” ஆங்கிலப் பத்திரிகையில், 6-ஆம் பக்கத்தில், விரிவான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர் மாவட்டத்தில் சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி இலக்கியா, கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஆகியோரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
“நீட்” தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக, Post Matric கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தச் சுழல் நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக” அரசு சார்பில் காலதாமதமாக அறிவித்ததும், இந்த மாணவ மாணவிகளுக்குக் கலந்தாய்வின்போதே முக்கியமான இந்தத் தகவலைத் தெரிவிக்காததும், நெருக்கடியான இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. கலந்தாய்வின்போதோ அல்லது அதற்கு முன்னரோ, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இந்தத் தகவலைக் கூறாததால் – இன்றைக்குப் பல மாணவ மாணவியரின் மருத்துவக் கனவு, “கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை” என்றாகி விட்டது. இதற்குத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

ஆகவே கல்விக் கட்டணம் செலுத்தும் பிரச்சினையால் தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்த மாணவ – மாணவிகள் அனைவருக்கும் ஆக்கபூர்வமாக உதவிடும் வகையில், மீண்டும் கலந்தாய்வு நடத்தி, அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான நடவடிக்கையைத் தாமதமின்றி எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புள்ள,
மு.க.ஸ்டாலின்.

(கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தை, சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் முதலமைச்சர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *