மருத்துவப்படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.. முதல் 15 இடங்களை பிடித்த மாணவர்கள் பங்கேற்கவில்லை

மருத்துவப்படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

சென்னை, நவ-23

மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டு இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 405 இடங்கள் கிடைத்தன. அதில் இந்த கலந்தாய்வு மூலம் 399 இடங்களை மாணவ-மாணவிகள் தேர்வு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக விளையாட்டுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அதில் விளையாட்டு மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவில் அனைத்து இடங்களும் நிரம்பிய நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இருந்த 132 இடங்களில் 41 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இதனால் 91 இடங்கள் காலியாகின.

இந்த நிலையில் மருத்துவப்படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. அதன்படி முதல் நாளில் தரவரிசை பட்டியலில் 1 முதல் 361 வரையில் இருப்பவர்களுக்கு (நீட் தேர்வு மதிப்பெண் 710 முதல் 631 வரை) அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

அவர்களுக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணி, 11 மணி, பிற்பகல் 2 மணி என 3 கட்டங்களாக நடக்க உள்ளது. இதில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *