பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்த பங்கும் இல்லை.. உச்சநீதிமன்றத்தில் பதில்மனு

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்த பங்கும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. இறுதி விசாரணை அறிக்கையை யாருக்கும் தரவேண்டிய அவசியமில்லை எனவும் கூறியுள்ளது. பேரறிவாளன் விடுதலையில் ஆளுநரே முடிவெடுக்க முடியும் எனவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

டெல்லி, நவ-21

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், பேரறிவாளன் உள்பட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் இதுவரை ஆளுநர் முடிவெடுக்கவில்லை.

இந்த நிலையில்தான், தன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்றுக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க, நவம்பர் 23ம் தேதிவரை காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில் இன்று சிபிஐ தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரத்தில் சிபிஐ தலையிடாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிபிஐ தரப்பு கூறியுள்ளதாவது:-

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான். அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக எங்களுடன் ஆளுநர் கலந்து ஆலோசிக்க வேண்டியது இல்லை. பெல்ட் வெடிகுண்டு விவகாரம் தொடர்பான விசாரணை விவரத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள தேவையில்லை. சர்வதேச சதி பற்றிய பன்னோக்கு ஆணையத்தின் விசாரணைக்கும், பேரறிவாளன் விடுதலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது பற்றி கேட்டு ஆளுநரிடம் இருந்து சிபிஐக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை. பேரறிவாளனை விடுவிப்பதா, இல்லையா என்பதை ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். எங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *