சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..பிரதமர் மோடி பங்கேற்பு

சவுதி அரேபியா தலைமையில் நடைபெறும் 15வது ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ளார்.

டெல்லி, நவ-21

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அகிஸ் தலைமையேற்று நடத்தும் 15-வது ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

“21 ஆம் நூற்றாண்டின் அனைவருக்குமான வாய்ப்புகளை உணர்ந்துகொள்வது” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் தற்போது வீடியோ கான்பரசிங் மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்த ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்,ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ உள்பட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்தும் மற்றும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் வளரக்கூடிய நிலைமைகளை உருவாக்குதல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நன்மைகளை பகிர்ந்து கொள்ள தைரியமான உத்திகளை கடைபிடித்தல் உள்ளிட்ட பொருளில் மாநாடு நடைபெறுகிறது.

ஜி 20 மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்ய கூட்டமைப்பு, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *