பாஜகவுடன் கூட்டணி தொடரும்..மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்.. முதல்வர் உறுதி..!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட அதிமுக – பாஜக கூட்டணியே சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, நவ-21

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு தமிழகத்தில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்தும், புதிதாகக் கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது ;-

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதிமுக அரசு. நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. மழை நீர் வீணாவைதைத் தடுக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். புதிய திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்ததும் கடைமடை பகுதிகளுக்கும் சென்று சேர்ந்துள்ளது. பருவ காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து அனுமதிக்க வேண்டும். தமிழகத்தின் முக்கிய நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்த கூட்டணியே, தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும். அடுத்து வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும். 2021-ஆம் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக – பாஜகவின் வெற்றிக் கூட்டணி தொடரும் என்று அறிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *