மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமித்ஷா..!

ரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

சென்னை, நவ-21

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித் ஷாவை உற்சாகமாக வரவேற்றனர். இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷா, அங்கிருந்து காரில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்டார். வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட திட்டம், கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம்.

கரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம், திருமுல்லைவாயலில் ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் Lube Plant அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம்பி சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *