திமுக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
சென்னை, நவ-21

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம், பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வந்திருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக இந்த இணைப்பு நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இது குறித்து சி.டி. ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், கே.பி. ராமலிங்கம் இணைந்திருப்பது கட்சிக்கு பலம் சேர்க்கும். கட்சியின் சார்பாக ராமலிங்கத்துக்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை திமுக முன்னாள் உறுப்பினராகவும் அக்கட்சியின் விவசாய அணி செயலாளராகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். இவர், மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக கையாண்டு வருவதாகவும், 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனவும் கருத்து தெரிவித்தார். இதனால், கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துகளை கூறியதாக, கடந்த ஏப். மாதம் கே.பி.ராமலிங்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.