ஆன்லைன் ரம்மிக்கு தடை.. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் – தடையை மீறினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை.!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சென்னை, நவ-20

ஆன்லைன் சூதாட்டம் மூலம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்’ எனக் கூறி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருந்தார். அதன்படி ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு இன்று தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுகிறது. மீறி விளையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாதம் தண்டனையும் விதிக்கப்படும். ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். ஆன்லைன் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனை தடுக்கப்படும். பணம் வைத்து விளையாடுபவர்கள், கணிணி, உபகரணங்கள் தடை செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *