தமிழகத்துக்கு மத்திய அரசின் 12 விருதுகள்!!! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்…

புதுடெல்லி, அக்டோபர்-23

மின்னணு ஆளுகையில் முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் இ-பஞ்சாயத் புரஸ்கார் உள்ளிட்ட 12 விருதுகளை தமிழகம் பெற்றுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்தார்.

ஊராட்சி அமைப்புகளின் சிறந்த செயல்பாடு மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய அளவில் விருது வழங்கி வருகிறது. அதன்படி, ஊராட்சி அமைப்புகளில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு இ-பஞ்சாயத் புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கான விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விருதினை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஊராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள், ஊராட்சிகளின் திறன் மேம்பாட்டிற்கான விருது சேலம் மாவட்டத்திற்கும், ஒன்றிய அளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது.

இதேபோல், ஊராட்சி அளவிலான விருது சேலம் மாவட்டம் கோனூர், கோவை மாவட்டம் மத்வராயபுரம், நாமக்கல் மாவட்டம் அரசபாளையம், ஈரோடு மாவட்டம் வெள்ளாளபாளையம், மதுரை மாவட்டம் கோவில்பாப்பாக்குடி, திருவண்ணாமலை மாவட்டம் S.U.வனம் ஆகிய 6 கிராம ஊராட்சிகளுக்கு தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது வழங்கப்பட்டது.

மேலும், திருப்பூர் மாவட்டம் ராவணப்புரம் கிராம ஊராட்சிக்கு சிறந்த கிராம நடத்தியதற்கான நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ கிராம சபா தேசிய விருதும், தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் கிராம ஊராட்சிக்கு குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.  

இது குறித்து டெல்லியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.17, 199 கோடி மதிப்பீட்டில் 78,190 கி.மீ. சாலைப் பணிகள், ரூ.6.329 கோடி மதிப்பீட்டில் 3.86 லட்சம் குடிநீர் திட்டப்பணிகள், ரூ.875 கோடி மதிப்பீட்டில் 20.87 லட்சம் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ.807.63 கோடி மதிப்பீட்டில் 543 பாலங்கள், ரூ.654 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் ஊரக பகுதிகளில் 49.86 லட்சம் தனிநபர் கழிப்பறைகள் அமைத்து சாதனை புரிந்துள்ளது. நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் 15.14 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக மாற்றமடைந்துள்ளன. கடந்த 2-ம் தேதி இந்திய அளவில் ஊரக தூய்மையில் மத்திய அரசின் சிறந்த மாநிலத்திற்கான விருதினை பிரதமர் மோடியிடம் பெற்றுள்ள நிலையில், தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டி மேலும் 12 விருதுகள் பெற்றுள்ளது பெருமையாகவும், ஊக்கமளிக்கும் விதமாகவும் உள்ளது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *