தற்கொலைக்கு முயற்சித்தேனா?.. கற்பனைச் செய்திகளை வெளியிட வேண்டாம்.. திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா விளக்கம்

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, நவ-20

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான பூங்கோதை ஆலடி அருணாவுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்கில் உள்ள அவரது வீட்டில் சுயநினைவு இல்லாத நிலையில் இருந்த அவரை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று அவர் உடல் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வதாகவும், அதனால் தன்னை டிஸ்சார்ஜ் செய்யுமாறும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டார். இதையடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையே பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியானது. இந்நிலையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி தவறானது. திரித்து கூறப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார். மேலும் ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தின் உறையும் தன்மை குறைவு ஆகியவற்றால் மயக்க நிலை ஏற்பட்டுள்ளது. மயக்க நிலைக்கான காரணத்தை கண்டறிய சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-

19.11.2020 காலை ஆலங்குளத்தில் காலை 6 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்து – என்னுடைய பணியாளர்கள் உடனடியாக சீபா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இரத்த பரிசோதனையில் என் உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு – மூளை, நெஞ்சு சி.டி ஸ்கான் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை மறைத்து தவறாக திரித்து நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல் ஊடகங்கள் பொய்யுரை பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

15 ஆண்டுகள் அரசியலில் – முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்கள் என்னை அமைச்சராக நியமித்து அழகு பார்த்தார். அப்போது எவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் என்னை தன் மகளைப் போல் பாசத்துடன் நடத்தினாரோ, அதேபோல கழகத் தலைவர் அண்ணனும் என் மீது பாசமாக இருக்கிறார். எனக்குச் சட்டமன்ற உறுப்பினராக, மாநில மருத்துவ அணி தலைவராக பணியாற்ற வாய்ப்பளித்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

இத்தகைய சூழலில் கழகத்திற்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்.தற்போது நான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான மருத்துவ காரணங்களை அறிய அனுமதிக்கப்பட்டு – சிகிச்சை பெற்று வருகிறேன்.

எனக்கு மட்டுமல்ல, என் தந்தைக்கும் எனக்கும் முகவரியும் முன்னேற்றமும் தந்தது இந்த மாபெரும் ஜனநாயக இயக்கமான தி.மு.க. ஆகவே எனக்கு மருத்துவ ரீதியாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்து தயவுகூர்ந்து இத்தகைய தவறான வதந்திகளைப் பரப்பி – என்னை வளர்த்துள்ள கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என்றும் – என் உடல்நிலை குறித்து விசாரிக்காமல் பத்திரிகைகள், ஊடகங்கள் கற்பனைச் செய்திகளை வெளியிட வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டு கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *