பக்தர்களின்றி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது.

திருச்செந்தூர், நவ-20

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆண்டுதோறும் சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மாலை 4.30 மணி அளவில் தொடங்கியது. சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். கடற்கரையில் சூரனை வதம் செய்யும் வேல், பூஜைகள் செய்யப்பட்டு சஷ்டி மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது.

அதனை தொடர்ந்து யானை முகம் கொண்ட தாரகாசூரன், சிங்கமுகாசூரன் ஆகியோர் வதம் செய்யப்பட்டனர். இதையடுத்து, அரோகரா கோஷம் முழங்க சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. சூரசம்ஹாரம் நிறைவு பெற்ற பிறகு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *