சிறந்த காவலர்களுக்கு விருது வழங்கி முதல்வர் பாராட்டு!!!

சென்னை, அக்டோபர்-23

காஞ்சிபுரம் அத்திவரதர் சுவாமி தரிசன பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு விருதுகள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவுரவித்தார்.

காவல் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை, ஊர்காவல் படை மற்றும் குடிமை பாதுகாப்பு துறை, தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தலைவர் பதக்கங்கள், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு காஞ்சிரபும் மாவட்டத்தில் 40 நாட்களாக இரவு பகலாக அத்திவரதர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதக்கங்கள் வழங்கும் விழாவில், ஜனாதிபதி, தமிழக முதல்வர் பதக்கங்கள், அத்திவரதர் சிறப்பு பணி விருதை முதல்வர்   எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். 596 போலீசாருக்கு விருது வழங்கப்பட்டது. அத்திவரதர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 60 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக டிஜிபி திரிபாதிக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் எந்த குறுக்கீடும் இல்லாமல் காவலர்கள் முழு சுதந்திரமாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஓராண்டில் காவல்துறை பல சோதனைகளையும், சவால்களையும் சந்தித்துள்ளது என கூறினார். மோடி-சீன அதிபர் வருகையின் போது காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் என கூறினார். காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது. அமைதி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது என்றார். பொருளாதார வளர்ச்சிக்கு அமைதி நிலவுவது அவசியம் என்றும், தமிழ்நாட்டில் நிலவும் அமைதியின் காரணமாகதான் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் நம் மாநிலத்துக்கு வந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் 1.31 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார். இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தங்கமணி, அன்பழகன் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *