லடாக் விபத்தில் உயிரிழந்த தமிழக வீரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி.. முதல்வர் உத்தரவு
லடாக் விபத்தில் மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, நவ-20

காஷ்மீரின் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி (34) உயிரிழந்தார். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்த இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இறந்த கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா(7), வைஷ்ணவி(5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர்.
லடாக் விபத்தில் இறந்த தமிழக வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர், லடாக் பகுதியில், இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப் பிரிவில் பணியாற்றி வந்த, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், திட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி என்பவர் கடந்த 18-ம் தேதி எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு உத்தரவிட்டேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
‘லடாக் பகுதியில் நிகழ்ந்த எதிர்பாரா வாகன விபத்தில் ராணுவ வீரர் நாயக் கருப்பசாமி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என முதல்வர் கூறி உள்ளார்.