மீனவர்களுக்கு என்று ஒரு அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.. ஜி.கே.வாசன் கோரிக்கை

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி சுமுகமான, நிரந்தரத் தீர்வு காண வேண்டும். அதோடு மீனவர்களுக்கு என்று ஒரு அமைச்சகத்தையும் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, நவ-20

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

“உலக மீனவர்கள் தினம் 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதியில் இருந்து கொண்டாடப்படுகிறது. கடல் மாசுபாட்டால் மீன்வளம் குன்றி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவற்றைத் தடுக்கவும், மீனவர்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தமிழகம் 1076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். இயற்கைச் சீற்றங்களுக்கு இடையில் ஒவ்வொரு நாளும் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல்தான் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்களின் பாதுகாப்பிற்குப் போதிய உபகரணங்களையும், உயர் தொழில்நுட்பத் தகவல் தொடர்பு சாதனங்களையும் அனைத்து மீனவர்களுக்கும் மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி சுமுகமான, நிரந்தரத் தீர்வு காண வேண்டும். அதோடு மீனவர்களுக்கு என்று ஒரு அமைச்சகத்தையும் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உலக மீனவர்கள் தினத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். மீனவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *