மேகேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க முயற்சி.. வைகோ சரமாரி புகார்..!!

சென்னை, நவ-19

Madurai: Tamilnadu: 24/03/2014: MDMK general secretary and party’s Virudhunagar Lok Sabha contituency cadidate Vaiko speaking at Thoppur in Madurai on Monday during the election campaign.Photo:R. Ashok

இது தொடர்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:-

“கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கடந்த ஆகஸ்டு மாதம் மைசூருவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசிடம் இருந்து விரைவில் ஒப்புதல் பெறப்படும். கர்நாடகாவின் பாசனப் பரப்பை அதிகரிப்பதுதான் தமது அரசின் லட்சியம் என்றும் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 15இல் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி, மேகேதாட்டுப் பகுதியில் அணை அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அப்போது இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் குழு அமைத்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை டெல்லியில் சென்று சந்தித்து வலியுறுத்துவோம். மத்திய அரசின் அனுமதியைப் பெற்று உடனடியாக மேகேதாட்டு அணையின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவோம் என்று அறிவித்தார்.

அதன்படி பிரதமர் மோடியை எடியூரப்பா செப்டம்பர் 18ஆம் தேதி சந்தித்து, மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கிட மனு அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 18ஆம் நாள் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி டெல்லியில், மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்து, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அவரோடு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய நிலக்கரித்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், ஜலசக்தித்துறை அமைச்சரிடம் மேகேதாட்டு அணைக்கு ஒப்புதல் தர வலியுறுத்தி இருக்கிறார்.

இவர்களின் சந்திப்புக்குப் பின்னர் மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது ட்விட்டர் பதிவில், ‘கர்நாடக மாநில நீர் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

9,000 கோடி ரூபாய் செலவில் மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே தடுப்பு அணை கட்டத் திட்டமிட்டுள்ள கர்நாடகா, இதன் மூலம் 67.16 டிஎம்சி நீரைச் சேமித்து வைத்து, பெங்களூரு நகர குடிநீர்த் தேவைக்கும், அணை நீரைப் பயன்படுத்தி 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றவும் முனைந்துள்ளது.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் 2018, பிப்ரவரி 18இல் அளித்த தீர்ப்பு ஆகியவற்றை உதாசீனப்படுத்தி வரும் கர்நாடக மாநில அரசு, மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவது என்று மத்திய அரசின் அனுமதியைப் பெறுவதற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டப்படுமானால் காவிரிப்படுகை மாவட்டங்களுக்கு சொட்டு நீரைக் கூட காவிரியில் பெற முடியாது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியவாறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய சொற்ப நீரான 177.25 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்தைப் பொறுத்தவரையில் கானல் நீராகப் போய்விடும்.

தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கின்றபோது, மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கர்நாடக மாநில நீர் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்று தெரிவித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழகத்திற்கு பச்சைத் துரோகம் இழைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபடக் கூடாது; மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மேகேதாட்டு அணைத் திட்டத்தையே ரத்து செய்திட எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *