திமுகவில் உட்கட்சி பூசல்..திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சி..!

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை, நவ-19

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. இவர் நேற்றிரவு அதிகளவு தூக்க மாத்திரை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக பூங்கோதை ஆலடி அருணா அதிகளவு தூக்கமாத்திரைகளை உட்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் முக்கிய பெண் எம்எல்ஏக்களில் ஒருவர் பூங்கோதை ஆலடி அருணா. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தவர். தற்போது எம்எல்ஏவாக இருந்து வருகிறார். மருத்துவரான இவர் திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தந்தை ஆலடி அருணா முன்னாள் தமிழக அமைச்சராவார்.

இந்நிலையில், திமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா நேற்று இரவு அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நெல்லையில் உள்ள ஷூபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து தற்போது இவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, இது தொடர்பாக தீவிரமாக விசாரித்த போது தென்காசி மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனுக்கும் இவருக்கும் சிறு மனகசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீவலப்பேரி பாண்டியன் என்பவர் பூங்கோதை ஆலடி அருணாவை மனகசப்பில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அவரது குடும்ப உறவுகளுக்கு இடையே ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதிலும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *