மருத்துவ கலந்தாய்வு.. மாணவர்களின் இருப்பிட சான்றிதழை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு..!
தமிழகத்தில் நடைபெறும் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்போரின் இருப்பிடச் சான்றிதழை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவ-19

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிறமாநில தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாட்டுத் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழ்நாடு மற்றும் கேரள மாநில கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து 2 தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. மாணவியின் தந்தை நாங்கள் முறைகேடு எதுவும் செய்யவில்லை தெரிவித்தார். இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘ஒரு மாணவர் இரண்டு மாநிலங்களில் விண்ணப்பிப்பதில் தவறில்லை. இரண்டு மாநிலங்களிலும் அந்தந்த மாநில இருப்பிடச் சான்றிதழ் வழங்கினால் தான் தவறு’ என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பல்வேறு கட்சித்தலைவர்கள், மாணவர்கள் என பலரும் இதுகுறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுள்ள மாணவர்களின் இருப்பிட சான்றிதழை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 34 மாணவர்களின் பெயர் தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ரேங்க் பட்டியலில் இடம்பெற்று முறைகேடு அம்பலமான நிலையில் 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைத்து. இந்த குழுவின் தலைவராக செல்வராஜ் உள்ளார். ராஜிவ் காந்தி, ஓமந்தூரார் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.