டெல்லியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவராக பொறுப்பேற்றார், வானதி சீனிவாசன்..!
டெல்லி, நவ-19

தமிழக பாஜக-வின் துணைத் தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வரும் வானதி சீனிவாசனுக்கு பாஜக மகளிரணியின் அகில இந்திய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் வானதி சீனிவாசனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பலரது பாராட்டுக்களைப் பெற்று தந்துள்ளது. இவரை தேசிய மகளிரணித் தலைவராக அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கடந்த மாதம் அறிவித்தார். இந்நிலையில் வானதி சீனிவாசன் டெல்லியில் தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.
வானதி சீனிவாசன் பாஜக தலைமை அலுவலகத்துக்கு செல்லும் போது, மேளதாளங்கள், சால்வைகள் மற்றும் பூச்செண்டுகள் கொடுத்து மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் வானதி சீனிவாசன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கோவை மாவட்டம். தொண்டாமுத்தூரில் 1970ம் ஜூன் மாதம் பிறந்தவர் வானதி சீனிவாசன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். பாஜக கட்சியில் இணைந்த வானதி சீனிவாசன், 1993ம் ஆண்டு முதல் அக்கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இவர் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.
பதவியேற்றதும் வானதி சீனிவாசன் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சி தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. இதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பா.ஜனதா கட்சி தமிழ் பெண்ணால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த பதவியை வழங்கி இருக்கிறது. அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் கடினமாக உழைப்பேன். கட்சியின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகரிக்கவும், அதிக அளவில் பெண்களை ஈரக்கவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத்தரவும் தேசம் முழுவதும் பாடுபடுவேன்.
குறிப்பாக தமிழின் சிறப்புகள் தமிழர்களின் பாரம்பரியம் தமிழகப்பெண்களின் ஆளுமைகள் பற்றி நாடு முழுவதும் எடுத்துச் செல்வேன். உலகின் தலைசிறந்த மொழியாகவும் கலாச்சாரமாகவும் விளங்கும் தமிழர் பெருமைகளை இந்தியா முழுவதும் எதிரொலிக்கச் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பதவியேற்பு விழாவையொட்டி டெல்லி பா.ஜனதா அலுவலகத்தின் முன்பு பெரிய அளவிலான வானதி சீனிவாசன் படம் வைக்கப்பட்டிருந்தது. பா.ஜனதா அலுவலகத்தில் ஒரு தமிழ் பெண்ணின் படம் பெரிய அளவில் இடம் பெற்றது இதுவே முதல் முறை.
தேசிய தலைவியாக பொறுப்பேற்றுள்ள வானதிக்கு கட்சி அலுவலகத்தில் இரண்டு உதவியாளர் அலுவலகங்கள் உள்பட மூன்று அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் தனி வீடு, கார் வசதியும் கொடுக்கப்படுகிறது