நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை…

அக்டோபர்-23

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நான்கடுக்கு பாதுகாப்புடன் வியாழன்று நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை நடைபெறுகின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரம் புறநகர் பகுதியில் உள்ள ஈ.எஸ். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்படுகின்றன.

அதேபோல் நாங்குநேரி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. மையம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிசிடிவிக் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மொத்தமாக 14 மேசைகளில் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனிடையே இரண்டு தொகுதிகளிலும் நான்கடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு துவங்கி 11 மேசைகளில் 3 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *