மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 267 மாணவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

மருத்தவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது.

சென்னை, நவ-19

2020-21-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது.

அரசு கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 32 எம்.பி.பி.எஸ். இடங்களில் 227 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,147 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 86 இடங்களும் என 313 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 165 பல் மருத்துவ இடங்களில்(பி.டி.எஸ்.) 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,065 பல் மருத்துவ இடங்களில் 80 இடங்களும் என 92 பி.டி.எஸ். இடங்களும் ஆக மொத்தம் 405 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

முதல் நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் அறிவிக்கப்பட்ட தரவரிசையின் படி 267 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். தினம் 500 மாணவர்கள் வீதம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று பிற்பகல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 267 மாணவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *