ஜம்மு காஷ்மீர் எல்லையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினர் அதிரடி

ஜம்மு-காஷ்மீரில் நக்ரோட்டா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர், நவ-19

ஜம்மு மாவட்டம் நக்ரோட்டா நகரில் உள்ள பான் சுங்கச்சாவடி நோக்கி இன்று அதிகாலையில் பயங்கரவாதிகள் வாகனத்தில் வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது ஒரு வாகனத்தை சோதனையிட முயன்றபோது, உள்ளே இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த என்கவுண்டர் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அப்பகுதிக்கு ஏராளமான ராணுவ வீரர்கள் விரைந்தனர். பயங்கரவாதிகள் இருந்த வாகனத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். 2 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய 11 ஏகே-47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து ஜம்மு- காஷ்மீர் காவல்துறை டி.ஜி.பி தில்பாக் சிங் கூறியதாவது, ”தீவிரவாதிகள், காஷ்மீரிலிருந்து ஜம்மு நோக்கி பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது சோதனைச் சாவடியருகே காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கையெறி குண்டுகளையும் தீவிரவாதிகள் வீசினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் கொடுத்த பதிலடியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகாலை 5 மணி முதல் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *