ஏமாறாதீர்கள்.. சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் கிடையாது..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. இந்த சேவையினை இலவசமாகவே வழங்கி வருகிறோம். எனவே பக்தர்கள் பணத்தை கொடுத்து வீணாக ஏமாற வேண்டாம் என தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

சபரிமலை, நவ-19

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி வருபவர்கள், கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

அந்த சான்றிதழ் தரிசனத்திற்கு, 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தாமதமாக தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கும், உடல் நலம் குன்றிய பக்தர்களுக்கும் நிலக்கல்லில் குறைந்த கட்டணமான ரூ.625-ல் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும். சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. 2021-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி வரை 86 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டில், சபரிமலை தரிசனத்திற்கு தற்போதும் ஆன்லைன் முன் பதிவு நடைபெறுவதாகவும், அதற்கு முன்பதிவு மையங்கள் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களில் ஒருவருக்கு ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. முன்பதிவு, கொரோனா பரிசோதனை, பிரசாதம் ஆகியவற்றிற்கான கட்டணம் என கூறி பணத்தை வசூலிப்பதாக தெரிய வந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. இந்த சேவையினை இலவசமாகவே வழங்கி வருகிறோம். எனவே பக்தர்கள் பணத்தை கொடுத்து வீணாக ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அதில் தேவஸ்தான தலைவர் வாசு கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *