சென்றாய பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

சேலம் மாவட்டம் பெரிய சோரகையில் நடைபெற்ற சென்றாயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சேலம், நவ-19

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து கார் மூலம் முதல்வர் பெரிய சோரகைக்கு வந்தார். வழியில் இரும்பாலை, சோளம்பள்ளம் சித்தனூர், தாரமங்கலம் பைபாஸ், தாரமங்கலம் டவுன் மற்றும் வழிநெடுகிலும் திரளான பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் பெரிய சோரகைக்கு வந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார். கோவிலுக்கு வந்த தமிழக முதல்வரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதுதவிர ஊர்மக்கள் திரளாக வந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

பிறகு முதல்வர் சென்றாய பெருமாள் கோவில் சென்று வணங்கினார்.
கோவில் அருகில் அமைக்கப்பட்டு இருந்த யாகசாலை பூஜையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது குடும்பத்தினருடன் சுமார் 15 நிமிட நேரம் வரை அமர்ந்திருந்தார்.

கும்பாபிஷேக விழாவையொட்டி சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் யாககுண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது. இதன் பிறகு பல்வேறு ஊர்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புண்ணிய தீர்த்தம் கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *