ரஜினி வேறு கட்சியில் இணையமாட்டார்-கருணாஸ்

சென்னை, அக்டோபர்-23

ரஜினி வேறொரு கட்சியில் இணையமாட்டார் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற இருப்பதால் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து கருணாஸ் அழைப்பு விடுத்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, தேவர் ஜெயந்தி 112ஆவது குருபூஜை விழாவுக்கு முதலமைச்சர் வருகை தருவதாக உறுதி அளித்திருக்கிறார்.  உள்ளாட்சி தேர்தல் குறித்துப் பேசும்போது முக்குலத்தோர் புலிப்படைக்கு உரிய அங்கீகாரம் அளித்தால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். ரஜினியுடன் குறுகிய கால பழக்கம் மட்டுமே இருந்தாலும் நெருங்கிப் பழகியுள்ளேன். அவர் தனியாக கட்சி தொடங்குவாரே ஒழிய வேறு ஒரு கட்சியில் இணையமாட்டார். இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *